திண்ணைக் கவிதைகள்
(கவிதைகள்)

ஆசிரியர்:
டீன்கபூர்
(அப்துல் கபூர் றபீஉத்தீன்;)

விலாசம் : 362A/3, ஹாஜியார் வீதி, மருதமுனை -06, இலங்கை. தொலைபேசி : 067 2221333, அட்டை, புத்தக வடிவமைப்பு, கணினி அச்சுக் கோர்ப்பு : டீன்கபூர் முதற் பதிப்பு : ஜனவரி 2007 வெளியீடு : புதுப்புனைவு இலக்கிய வட்டம், மருதமுனை. அச்சுப் பதிப்பு : நியூ செலக்ஷன், அக்கரைப்பற்று. விலை : ரூபா.100.00

சமர்ப்பணம்

என்
தந்தைக்கும்
தாய்க்கும்

உபகாரத்திற்கு...

www.thinnai.com
புதுப்புனைவு இலக்கய வட்டம்
அறநிலா
அம்ரிதா ஏயெம்
எஸ்.ஏ. அப்துல் ஹப்பார்
முபா

கருத்துரை :

இணையத் தமிழுக்கு ஓர் அணி

தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் மிகப்பாரிய வளர்ச்சி அடைந்துள்ள இணைய ஊடகத்தில் இணையத் தமிழும் அதிக வளர்ச்சியை அடைந்துள்ளதெனக் கூறலாம். அந்தவகையில், 'திண்ணை' இணையச் சஞ்சிகையில் வெளியான தனது கவிதைகளை நண்பர் டீன்கபூர் 'திண்ணைக் கவிதைகள்' என்னும் தலையங்கத்தின் கீழ் ஒரு கவிதைத்; தொகுப்பாக உருவாக்கி இருக்கின்றார். இவரது சில கவிதைகளைத் 'தினமுரசு' வாரவெளியீடும் இணையத்திலிருந்து எடுத்து பிரசுரித்திருக்கின்றது. இது இவரது இரண்டாவது தொகுப்பாகும். முதலாவது தொகுப்பு 'குரோட்டன் அழகி' என்பதாகும்;. அந்தத் தொகுப்பில், இயற்கையை ஆனந்தித்தும், இழந்துபோன இயற்கையை நினைத்து துக்கித்தும், தனது இளமையை மீட்டியும் இருந்தார். அதிலிருந்து வேறொரு தளத்திற்குள் திண்ணைக் கவிதைகள் மூலம் டீன்கபூர் சென்றிருக்கின்றார்.

திண்ணைக் கவிதைகள் இயற்கைப் பிரிவு, அதன் அரசியல், நாட்டு அரசியல், அதன் போலித்தனம், வக்கிரத்தனம், அரசியல்வாதிகள், சுனாமியின் அரசியல், சுனாமி அகதி வாழ்வின் நெருக்குவாரங்கள், யுத்த அவலம், சமாதானத்திற்கான ஏக்கம் பற்றியெல்லாம் பேசுகின்றன.

'எங்கே என் அம்புலி' என்ற கவிதையில் தொலைந்து போன அம்புலியை டீன்கபூர் தேடும்போது,
அச்சம் முகத்தைக் காய்த்து
இதயத்தில் செட்டை முளைத்து
பொழுது பொழுதாய் அடித்து,
தெருவும் திசையும் வேறுவேறாய்..
என்ற அழகான கவித்துவம் மிக்க வரிகள் கிடைக்கின்றன.

'கடலின் அகதி' அகதி வாழ்வின் நெருக்குவாரங்களையும், சுனாமியினால் வீடிழந்தோர்படும் அவதிகளையும் அல்லல்களையும் பேசுகின்றன.
மருதையின் பல கிளைகள் ஒடிந்தபடி
கிடக்க..
ஏழையின் கண்ணீர் செல்கிறது
இடிந்த கட்டிடங்களை
நனைத்து.. துவைத்து..
என்ற வரிகள் அவர்களின் அல்லல்களை கண்முன்னே கொண்டுவந்து காட்டுகின்றன.

'உலகம் நசிந்து' என்ற கவிதையில்,
கனவுகளை பாம்புகள் தின்ன
சுவாசிக்கும் மனிதனாக மட்டும்
நான் இருக்கிறேன்.....
என்று டீன்கபூர் உலக ஒழுங்கை ஆத்திரம் கொண்டு இயலாமைப்படுகிறார்.

'கிணற்றுத் தும்பி படியிறங்கி' என்ற கவிதையில்,
குறுக்குக் கோழிக்கு கூந்தலைக் கட்டி
விரட்டவும் பயமாக, பயமாக..
என் வெளி உலகம்
குடியிருக்கும் என் வளவாய் சுருங்கி..
சுருங்கி..
நான் இருக்கிறேன்.
இந்தவரிகள் அச்ச உணர்வுடன் கூடிய ஏமாற்றத்தை அழகாகக் காட்டுகின்றன.

இத் தொகுதியிலுள்ள மிகச்சிறப்பான கவிதைகளுள் 'கனவின் துண்டு' ம் ஒன்றாகும். சரியலிசப் போக்குகளையும், மெஜிக்கல் றியலிசப் போக்குகளையும் இக் கவிதையில் காணக்கூடியதாக கிடக்கிறது.
கனவின் துண்டுகளை
இரவின் பாதிக்குள்
புதைத்து விழிப்பதற்குள்
நரகத்து மொழியின் விபரீதம்
இன்னமும் செவிகளை நசுக்கின.....
என்னும் வரிகளிலுள்ள சொற்கட்டு, படிம அழுகு என்பன ஏமாற்றம், ஆற்றாமை போன்ற பெரிய அதிர்வலையை உருவாக்குகின்றன.

'தென்னையின் வடிவு' என்ற கவிதைக்குள் அதன் இலைகள் வேறு திக்குகளுக்குள் போவது போல வேறு அனுபவங்களை பெற்றுக்கொள்ள முடிகிறது.

அழகிய தென்னை
என் காதலியின் ஒய்யாரம் தெரிகிறது
காக்கையைப்பற்றிய கனவொன்றும்
பாய்ந்தது
கரையும் காக்கைகளில்
சோகமுகத்தோடு ஒரு காகம்
மின் கம்பமொன்றில் தொங்குவது கண்டேன்.
எவன் அடித்து வளத்தினானோ.
வாசலைப் பெருக்கி
மீன்குடலை அவித்து உண்டு
அது வாழ்ந்த தென்னை ஞாபகத்தை
நடுகிறது.
இன்னொரு பிள்ளையாக.....
என்று ஒரு துன்பியல் முடிவோடு தென்னைக்கு அப்பாலும்; முடிகிறது.

நிலவை யுத்த பூமியிலிருந்து மீட்டு, அதன் தூய்மையை ஊட்டி, அதன் புனிதத்தை காக்க 'கறிவேம்பில் நிலவு' இல் டீன்கபூர்,
நிலவு, புனிதம் நிறைந்த ஒரு பிள்ளை
அழகு பெண் போன்ற முகமுடையதே நிலவு
நாளை, என்றோ ஒரு நாள்
ஒரு வெளியிலிருந்து
என் காதல் மொழியை
உன் ஒளியில் எழுதிப் பார்ப்பேன்.
என்ற வரிகள் அழகான கவித்துவ வீச்சுள்ள வரிகளாகும்.

டீன்கபூரின் கவிதைகள் கனவுக்கும் யதார்த்தத்துக்கும் இடையிலான உணர்வுகள் வெளிப்பட்ட மனநிலையில் புனையப்பட்டவைகளாகும். இவரின் கவிதைகளில் சர்ரியலிச, மெஜிக்கல் ரியலிசப் போக்குகளை அவதானிக்க முடிகிறது. பிம்பமாற்றம், தளமின்மை, வடிவமின்மை, வெகுஜனத்தன்மை போன்றன சேரும்போது சில கவிதைகள் பின்நவீனத்துவம் நோக்கியும் பாயப்பார்க்கின்றன. அவரது இலக்கியக் கொள்கையையும், அவருடைய சமுதாயப் பார்வையையும், மனித நலத்தை நாடிய போக்குகளையும் அவருடைய கவிதைகளிலிருந்து இனங்காண முடிகின்றது. நிறையக் கவிதைகளில் குத்தலான நகைச்சுவை உணர்வும் விரவிக்கிடக்கிறது. டீன்கபூரின் கவிதைகளின் இன்னொரு சிறப்பம்சம் மண் மணக்கும் சொற்களாகும்.. சில கவிதைகளுக்குள் இருண்மை காரணமாக முதல் வாசிப்பில் நுழைவது ஓரளவு கடினமானதாகவே இருக்கின்றது. ஆனால் டீன்கபூர் அந்த இருண்மைகளைக் களைவதற்கான சிறு ஒளியையாவது கவிதைகளின் ஒரு மூலையில் வைத்திருக்கின்றார்.

அம்ரிதா ஏயெம்
02.01.2007

திண்ணையில் படிந்தவை......

எங்கே என் அம்புலி?
கூவிய சேவலின் சரிவர முடிவு
கலர்ப் பாம்பு கரை ஒதுங்கி
கடலின் அகதி
நேசி மலரை, மனசை
உலகம் நசிந்து
ஒருத்தி
சூரியனின் இளமை நரையாகி
கிணற்றுத் தும்பி படியிறங்கி
தேர்தலில் குதியாத வேட்பாளனாக
நெருப்பினில் வடித்து
கனவின் துண்டு
மூடுபனிக்குள் நான் அலற
சமாதானக் குழம்பு
மரங்கொத்தி வரலாம் இனி
விருந்தோம்பியின் பாடல்
தென்னையின் வடிவு
நெருப்பு நெருப்பு
கறி வேம்பின் நிலவு
உதட்டில் மூட்டும் கொள்ளியடுப்பு
நிலப் பந்துக்குள்
ஒரு பிடி உயிர்
வெங்காய மூட்டையில் கிளறிய மூளை
தூய்மை படிந்து உதறி
எங்கே என் அம்புலி?

கடல் மடியில் தவழ்ந்து
கடல் மடியில் உணர்ந்து
கடல் மடியில் கூடி
கடல் மடியில் காதல் பொழிந்து........

எங்கே என் அம்புலி?

கடற் காற்றில் மூச்செறிந்தாய்
கடல் வெளியில் உரத்துச் சிரித்தாய்
கடல் மடியில் எழுதி வடித்தாய்......

எங்கே என் அம்புலி?

அச்சம் முகத்தைக் காய்த்து
இதயத்தில் செட்டை முளைத்து
பொழுது பொழுதாய் அடித்து
தெருவும் திசையும் வேறுவேறாய். .....

எங்கே சென்றது என் அம்புலி?

எங்கே ஒளிந்தாய்
எங்கே மனசை விதைத்தாய்
எங்கே தூக்கத்தை அணைத்தாய்
எங்கே கனவைக் கரைத்தாய்

இனி என்ன?
நான் எங்கு செல்வேன்?
காற்றின் முதுகில் பயணம் செய்து.

வா. அன்பே!
இனியேனும் வனம் ஒன்றில் வகை செய்வோம்
ஒரு பெருமரத்தில் தவழ்ந்து பூரிப்போம்
என் நாள் வரும்
உன் மூக்கை நுள்ள
கடலை அணிசெய்ய.

என்றும் உன் உருவம் மறவேன்
உன் தூக்கணம் மின்னிய கடற் புனலில்.

¡¡
2005

கூவிய சேவலின் சரிவர முடிவு

வானத்து ஆட்சியின் அதிகாரம்
கழன்றது கடையாணி
சில்லொன்று உருண்டு வானத்தில்
திடீரென விழுந்து
வாழையில் முட்டி தென்னையைச் சரித்தது
அழுதது ஆதவன்
கூடவே வெள்ளியும் ஒன்று.

பின் வானமும் விழுந்தது
அதில் ஒரு துண்டை புசித்தது ஆடொன்று
செமிக்காத ஆட்டுக்கு வயிறு கோளாறு
மாட்டுக்குக் கேட்டது.

மாடும் கத்தியது
குட்டியையும் மடி கீழே அமர்த்தி
தன் முகத்தை நிலத்தில் உரசியது
சூடு கிளப்பி புகைந்து மனம் பற்றியது
அது விட்ட மலம் கொஞ்சம்
துண்டு வானத்தில் பட்டுத் தெறித்ததும்
சீ... என்று
மூக்கைக் குத்தியது ஒரு பூனை.

அதைக் கண்ட வெள்ளியோ விறைத்தது
ஓ.... என்று அழுத என்னில் சந்திரன் சிரித்தான்.

எலி வாயில் பட்ட வானத்தின் ஒரு துண்டு
பொரியலாய் மணக்க மாட்டியது
பூனைக்குச் சந்தோசம்
அழாதே தாயகமே!
குத்திய பூரான் பற்றிச் சொல்லவா நான்
அதன் விசம் பற்றி எழுதுவேன் நான்
இடையில் விழுந்துயர்ந்த புறாவுக்கும்
உடம்பு சொறிந்தது.

வானத்து ஆட்சியன் அதிகாரம் முடியவில்லை
இன்னும் வெடிக்கும்
இரத்தம் மிஞ்சிய படிக்கமாய் கவிழ்ந்து
அப்போது நான் குளித்த மழை நீரோ கறையாகுமா?

வானமே!
வானமே!
இடிக்காதே
நிலைமையைச் சரிவரத்தான் கூவுகிறேன்
என்றது சேவல்
நாளை இன்னொரு தேர்தல் நடக்கும்.

¡¡
2005

கலர்ப் பாம்பு கரை ஒதுங்கி

குடி நுகரும் ஊருக்குள்
வாவிக்குள் வந்த மாதிரி ஊர்ச் சல்லுக்குள்
ஜனநாயகம்
காயாத கருவாட்டில் புழுக்கும்
தலைக்குள் இருந்து வண்டுகள் உமிழும்.

பச்சைப் பாம்பு ஒன்று
மனிதாபிமானத்தின் இறக்கை விரிக்கும்
வறண்ட நாக்கு மக்களுக்கு பேசும்
எதிர்கால நாற்காலி முதிரையில் இருக்க
சுனாமிக்கு மூக்குத்தி குத்தி விழா காணுகிறது.

நீலமாய் ஒரு பாம்பு
சுனாமியால் நிரம்பிய வெளிநாட்டுச் சுரியை
நிரப்பிக் காண்பித்து
தெற்கில் அது சட்டை கழற்றுகிறது
காட்டையும் களனியாய்க் காட்டுகிறது
வடக்கையும் கிழக்கையும் என்னில் போர்த்துவேன்
என்று கூதலைக் காட்டுகிறது.

சிவப்பாய் இன்னொன்று
கண்களை உருட்டும்
முடியைக் கோதும்

பிணம் இனித் தின்னேன் எனக் கத்தும்
உழைப்பாளியைத் தீண்டேன் என முழங்கும்
ஏழைகளின் கண்ணீர் உவர்த்தலாகாது எண்ணுகிறது.

இப்பாம்பு
அலகொன்றை எடுத்து சிலம்பாடும்
தனியிடத்தில் நிற்காது
இனிப்பூட்டி அழைக்க விலாங்காக மாறியும் வாழும்
மூன்றாம் கடலிலிருந்து சீறுகிறது.

சுனாமியின் முடிபிடுங்க வந்திறங்கும்
சுனாமியின் நகம் பிடுங்க வந்திறங்கும்
ஊருக்குள்
மீண்டும் பேயர்களைக் கொத்த
எல்லா வர்ணப்பாம்புகளும்.

சுனாமி பூசிய கரியுடன் கியூவில்......

¡¡
2005

கடலின் அகதி

உப்புத்திகளாய் ஆக்கிய உப்பு நீர்
துறையில் ஒரு வீடு
ஒரு நாள்
முனையில் ஒரு வீடு
ஒரு நாள்
உள்ளூரில் ஒரு வீடு
ஒரு நாள்
இன்றைக்கு காளான் கொட்டில்களில் ....
உப்புத்திகளாய் ஆக்கிய உப்பு நீர்.

அரிசி
மா
பருப்பு ...
பசி அடங்கிய கதையாகியது
உறையுள்ளின் கதை ஊரை மேய்கிறது.

அக்பர் கிராமத்துக்கும்
அயர்ந்து எழ முடியாது
மக்பூலியா புரத்துக்கும்
மயக்கம் தெளிந்துவிட இயலாது
மருதையின் பல கிளைகள் ஒடிந்தபடி கிடக்க ....
ஏழையின் கண்ணீர் செல்கிறது
இடிந்த கட்டடங்களை
நனைத்து ... துவைத்து ...

பசி அடங்கிற்று
பாசம் அடங்கிற்று
ஆரவாரம் அடங்கிற்று
உப்புத்தி வாழ்க்கை இன்னம் உவர்க்கிறதே.

யுத்தம் சப்பிப் போட்ட மிச்சங்களை
அலை மென்று விழுங்கியதாய்
பசி அடங்கிய கதையாகியது
உறையுள்ளின் கதை ஊரை மேய்கிறது
நாளை யுத்தம் குரங்காய் பாயுமா?
நாளை சுனாமி அலையாய்ச் சீறுமா?

இங்கு காளான் கொட்டில்களில்
வேட்பாளரின் வருகைக்காக.....

¡¡
2005

நேசி மலரை, மனசை

எல்லாமே
எல்லாமே
எழுந்து இடுப்பை உயர்த்திட
இயலாது போகிறது
எலும்பு முறிந்த நாய் மாதிரி.

எல்லாம்,
எல்லை கடந்த எல்லாக் கந்தல்களும்
இதயத்தில் விழுந்து
நெருப்பிட விளைகிறது.

மணம் பரப்பும் பாக்களாகவோ,
மணம் நுகரும் மூக்களாகவோ,
இவன் இல்லை
ஊன்று கோலில் நடை பயிலும்
எல்லாம்
எல்லாம்
இவனில்,
பொய்ச் சாம்பல்
காற்றில் பறக்க சிறகு முளைத்த உயிர்கள்.

நீலவான் ஒளிர்விடும்
சந்திரனையும்
சூரியனையும்

கொஞ்ச நட்சத்திரக் குழந்தைகளையும்
பெற்றெடுத்த மாது
நான் லயித்துக் கிடக்க
பச்சையையும்
பசுமைகளையும்
தென்றலையும் மேயவிடும்
இன்னொரு மாது
பூமி
நான் ருசித்துக்கிடக்க.

கபடத்தோடு பதுங்கி நிற்கும் கடுவன் போல
புரிபடாத ஒன்றாய்
காத்துக்கிடக்கிறது ...

நேசி
மலரை
மனசை

நானும் நீயும்.

¡¡
2004

உலகம் நசிந்து

மூட்டைப் பூச்சிகள்
என்னிதயத்தைக் கடித்துத் தின்னுகிறது
இதயங்களில் வால் இருக்கும்
மூளையில் கொம்பு முளைத்திருக்கும்
மனிதர்கள் விழிகளை விழுங்கும் போது.

சூறாவளியால் சிக்குப்பட்ட கோழிக் குஞ்சாக
என் நினைவுகள்
என் தூக்கம் மலையிலிருந்து
குதித்துச் செத்துக்கிடக்கிறது.

கனவுகளை பாம்புகள் தின்ன
சுவாசிக்கும் மனிதனாக மட்டும்
நான் இருக்கிறேன்
இந்த நசிந்த உலகத்தில் நான்
ஒருவனாக இருப்பதால்.

என் உலகமே!
உனக்கு சூடு சொரணை வராதா?
சூரியன், சந்திரன், காற்று, நீர் அத்தனைக்கும்
எத்தனை ஒழுங்கு பார்த்தாய்
அதனால்தான்
இன்னும் இந்த உலகம் மூச்சுவிடுகிறது.
இவை ஒழுங்கு தப்புவதற்கு முன்
பூனை கக்கிய உங்கள் இதயங்களைக் கழுவி
சுருண்டு படுத்து படமெடுக்கும்
பாம்பு மனசை எச்சிலாகத் துப்புங்கள்.

வண்ணத்துப் பூச்சிகளை
உங்கள் இதயங்களில் மேயவிடுங்கள்
மேகத்தோடு பேசி
வெள்ளிகளோடு விளையாடி
சந்திரனைக் கொஞ்சி
தென்றலில் நீந்தி
மலர்கள் மீது உறங்குங்கள்.

இரத்தக் கடலுக்குள் தூக்கிப் போட்டதால்
செத்துக்கிடக்கும் இந்த உலகம்
மீண்டும் சவாசிக்கிறதா என்று பார்க்க?

¡¡
2004

ஒருத்தி

போதும் உன் சிரிப்பு
பாராங்கல்லை தலையில் போட்டு
ஒரு மழலையின் சிரிப்பாகக் கழிந்த வாய்
மல்லிகை மொட்டுக்கு ஒப்பானதாய்
விரியும் உன் சிரிப்பை.

இதோ பாடசாலை சுவர் மறைவில் போடு
தங்கு மடத்திற்கு மேல் ஏற்றி வை
பயணி அழுவான்
உன் கொண்டைக்கிளாத்தான்
கொண்டையில் விழுந்து.

வரும் பேரூந்தும் தவறிப் போகும்
கையைக் காட்டு
என்னை விடு
என்னிதயத்தை விடு
என் கண்களை விடு

பின்னாலே வரும் நவிந்த
துருப்பிடித்த வேனில் ஏறுகிறேன்
நெருங்கி நொருங்கிப் போவது
காதலைப் போல எனக்குப் பிடிக்காது
உன் சிரிப்பைப் போல
எனக்கானவை எல்லாமே தவறிப் போவதைப் போல
ஒரு வண்ணத்துப் பூச்சியின் இறக்கை
ஒரு தும்பியின் வால்
ஒரு மாலை வெயில்
தவறிப் போகுமிடத்து
என் வேகநடையைக் காட்டுவேன்
குதிரைக்கு ஒத்ததாய் ஓடுவேன்
எருமையில் ஏறுவேன்
உன் சிரிப்பைக் குறைக்கப்பார்
என்காதலியைப் போல.

சிதறும் யுத்தத்தின் துகள்களில்
உன் நா எழட்டும்
உன்னையும்
என்னையும்
அடையாளப்படுத்த.

¡¡
1999

சூரியனின் இளமை நரையாகி

சூரியனின் இளமை எனக்குப் பிடித்தது
என் மடிக்குள் விழுந்து மூச்சுவிடும்
மனிதனைக் கொய்து
புதைக்கத் தெரியாத அரசியல்வாதி
பட்டவன் கையிலெல்லாம் கத்தி இப்போது.

பூக்கல்லின் வழியாக முதற் கதிரைப் பாய்ச்சுவது
எனக்குத்தான்
சூரியனின் ஒரு கதிர்
எப்போதும் எனக்கு உரித்து
என் கதிரையில் அமர்ந்து ஆறுதல்படுத்திய
நாட்களுக்கு எப்போதும் முட்கள் விதைத்ததில்லை.

சூரியன் கவலை கொள்வான்
மேசைப் பேச்சுக்களின் நாற்காலி சுழன்று முடிவதில்
ஒரு மலரின் வாடலில் வேதனை தெரியும்
மலர்களெல்லாம் மலர்வதும் உதிர்வதும் மிஞ்சுமோ?

மாலையையும் காலையையும் அழகுபடுத்தும்
அதன் தூரிகை என்னூர் வாசலில் கீறும்
கிளையிடையே விழும் கதிரின் லயிப்பில்
வேம்பு சிரிப்பதும்
தென்னையின் குருத்தில் தாலிகட்டிப் புணர்வதும்
நான் ரசிப்பவை.

ஒரு பிரளயம் தொடரும் வரை
சூரியன் பிரசவித்த மழைக் குழந்தையின்
சிறு நீரில்
நான் குளித்து விளையாடிய காலம்......
பல அரசியல்வாதிகள் மேகத்தையும் வானத்தையும்
என் சூரிய நண்பனின் முகவரிக்கு விண்ணப்பித்து.

ஒரு கதிரின் பெறுமதியை
நான் காலை எழும்போது உணர்வேன்
ஒரு துப்பாக்கியின் சத்தமோ
ஒரு வதந்தியின் மொழியோ என்னை அடையாத வரை.....
பெருவிரல் அடையாளத்தையாவது இட்டு
மேசைப்பேச்சுக்கு சூரியனை அழையுங்கள்
அவன் போடும் வெளிச்சத்துக்கு.

¡¡
2004

கிணற்றுத் தும்பி படியிறங்கி

காலையில் கதிரவன் வாசலில் மேய்வான்
காகமும் பூனையும் சேவலும் அதனோடு பாடும்
பூமரம் மலர்த்தி பூக்களை
வாசலைப் பெருக்கும் பெண்ணையும் அணைக்கும்
இலைகளில் படிந்த பனித்துளிப் பருப்பு
ஆவியாய் ஆவியாய் நாளையின் நாளுக்கு.

விடியுமா?
வேர்விட்ட யுத்தத்தை நற்செய்தியாக்கி.

மாலையில் கதிரவன் கோடியில் நழுவி
கிளரும் பொன் வயல் வானத்தை
வரும் என்று,
வரும் என்று,

கோடியில் மனம் வெதும்பி
கறிவேம்புக் கன்றுகளும்
பப்பாசி மரம் ஒன்றும்
கதிரவன் கதிரில் கூதல் காயவோ?
இல்லை.

நாளை விடியுமா?
வேர்விட்ட யுத்தத்தை நற்செய்தியாக்கி

நானாக என்ன செய்ய?
முற்றமும் கோடியும், கோடியும் முற்றமும்
என் நாட்கள் ஊர்கின்றன.
கதிரவன் கதிரோடு.

குறுக்குக் கோழிக்கு கூந்தலைக் கட்டி
விரட்டவும் பயமாக, பயமாக...
என் வெளி உலகம்
குடியிருக்கும் என் வளவாய் சுருங்கி... சுருங்கி....
நான் இருக்கின்றேன்
கிணற்றுத் தும்பியாக படியிறங்கி
என் வளவுப் பாசியில் தங்குகிறேன்.

நாளை விடியுமா?
வேர் விட்ட யுத்தத்தை நற் செய்தியாக்கி..

¡¡
2004

தேர்தலில் குதியாத
வேட்பாளனாக

நான் தேர்தலில் குதியாத வேட்பாளன்
என் காடு தீப்பிடித்த போது
என் வானம் அழுது அணை உடைந்தது
கறுப்பு நிலவுக்குள்.

என் மூச்சு சுழலும் காற்றையே சுவாசிக்க
என் கிடுகுகள்
என் தகரங்கள்
சிறகோடு கிளம்பின.

என் கார் புழுதியைக் கொளித்து
சேற்றை விசிறி
உழுத தெருவில் நான் தோற்றுப் போனதில்லை
என் வாக்குகள் செதுக்கப்பட்டு நடப்படுகின்றன
சந்தி மகிழ்ந்தது.

வாக்காளன் ஒரு வரம்பினுள்
துப்பிய நீராகப் பாய்கிறான்
தந்திரம் பற்றிய பாடலை
அவனுக்கு நரி கற்றுக் கொடுத்தது
இரவுகள் குமிக்கப்பட்டு
சக்கர தேசத்திற்குள்
எவனும் நிமிர்ந்திட இயலா.

ஆகாயம் தட்டும் தலையில்
உருட்டிடும் குண்டுமணியாக என் நினைவுகள்
ஒரு தடைக்குள் விழிக்கின்றன.

பச்சைக்குள் பிடித்த புழுக்களையும்
நீலத்தில் படிந்த கறைகளையும்
சொண்டுகளால் பருகிக் கழிக்க
தேர்தலில் குதியாத வேட்பாளனாக.

அமைதியை ஒரு படுகுழி மரணமாய்ப் பேச
கற்பனையிலும் எனக்குள் ஒரு அமைதி
தேசத்தை உருவாக்க
என் அடையாள அட்டையும் தேவையில்லை எனக்கு.

¡¡
2004

நெருப்பினில் வடித்து

இடிந்த கட்டிடங்களுக்குள்
மூச்சற்று நகருகின்ற
உணர்வுகள் என் சேவலாய்த்; தலை உசுப்பின.

மெல்லிய தென்றலுக்கு
ஒரு காற்றாடியை விட்டு மகிழ
ஒரு குழந்தைக்காக நிலவு குளித்துச் சென்றது.

இன்னமும் காதுக்குள் இரைகின்ற
மென்மைக் கீதம்
உடைந்து தொங்குவது
முகாமைச் சுற்றிலும்.

நெருப்புக்குள் உலகைத் தேடி
ஆயிரம் ஆயிரம்
புறாக்களை பறக்கவிட்ட கரங்கள்
இரத்தத்தைத் துடைத்து நகைபுரிகின்றன.

முழு சந்தோசத்தை
பூமிக்குள் அனுப்பி மண்புழுக்களிடம் விசாரிக்க
ஒரு ஆணைக்குழுவை நியமிக்க வேண்டும்
ஒரு எல்லைக்கப்பாலேனும்
வட்டமேசை போட்டு அழ
குளிர்கின்ற நாட்டுக்குள்
என் கூதல் விறைக்கின்றது.

நாளை பெய்யும் மழை
காட்டு மழையா?
கடல் மழையா?.....
முகாம்களை முகத்தூரத்தை விட்டும் வைக்க.

¡¡
2003

கனவின் துண்டு

கனவின் துண்டுகளை
இரவின் பாதிக்குள்
புதைத்து விழிப்பதற்குள்

நரகத்து மொழியின் விபரீதம்
இன்னமும் செவிகளை நசுக்கின.

துண்டு துண்டுகளாக
அந்தரத்தில் தொங்கும் என் இளமை
பழுக்கத் தொடங்கிவிட்டது.

ஒரு மயிர்
கோழி கிளறிய என் குப்பைக்குள்
மின்னியது.

நெஞ்சுக்குள் உடைந்த
மலை முகட்டின் பாறை
வேர்விட்ட நிலையிலே.

அண்ணார்ந்து பனிப்படரின் வீதியில்
என் கனவை நடக்கவைத்தது ஊன்றுகோல்.

கனிந்த மாம்பழத்தின் பக்கம்
அணில் ஆட்கொள்ளவில்லை
இவன் கொக்கையுடன் கனவுகளுக்காக.

ஒரு பாதி இரவுக்குள்
இன்னும் என் கனவு வாயு கலையாத வயிறு.

கனவின் துண்டுகளை
இரவின் பாதிக்குள்
புதைத்து விழிப்பதற்குள்
நரகத்து மொழியின் விபரீதம்
இன்னமும் செவிகளை நசுக்கின.

¡¡
2003

குளிர்ச்சியின் காதல்

அசைத்துப் பார்த்தேன்
கயிற்றால் கட்டிய காற்று.
உறுமிப் பார்த்தேன்
சுடரால் பிணைத்த சூரியன்
கொழுவிப் பார்த்தேன்
மொட்டால் மெழுகிய மலர்.

விரல் நுனிவரை உண்மை உரைத்தது
பிரண்டு மடியாத நா
என்னில் வளர்த்த மூச்சு பிணத்தோடு சேரும் வரை.

கருவாடு நெருப்பில் வேவி
உள்ளம் குளிர்ந்தது
காலை உயர்த்தி தலைமேல் பதித்து
நடக்கத் தெடங்கியது கர்வம்.

ஓயாத அலையில் குளித்துக்கொண்டிருக்கிறேன்
ஒரு ஆண் அலையேனும் அழைக்க
இந்தப் பன்னல்கள்
என்னைத் தூக்கி நுரையில் தள்ளட்டும்.

காக்கை ஒரு மிரடு குடித்தது
என் அழுகையின் நீரை
பசிதீர்ந்ததோ.

பாசச் சுள்ளிகளை நிறைத்து கட்டிய கூடு
யாரும் கலைக்காது
உயரத்தில் மனிதவாடை வீசாது காணும்.
இவனும்...............

¡¡
2003

மூடுபனிக்குள் நான் அலற

பனி என்னைத் தெரியாமல் மூடியது உனக்கு
நான் கொறிக்கப்பட்டு
நான் உமியாக்கப்பட்டு
நான் எதற்கு?
சூப்பிய மாங்கொட்டையை வீச
அம்பொன்றைப் பாயவிட
எனக்கும் தெரியும்.

நீ மேலும் புத்தகங்களைப் புரட்டு
சமூகத்தை நண்பனாக்கு
உன் வயது
உன்னைத் துரத்தும் போது
பல கடல்களையும்
பல ஆறுகளையும்
நீ கடக்க நேரிடும்.

எனது காலம் கனைத்தது.
எனது நினைவுகள் அகவின
போரிட்டுப் புகைந்தது
மனிதம் என் மடிக்குள் கிடக்க
சமூகச் செதிழ்களை சுரண்டிப் புலம்பி.

என் திரி கருகிக்கொண்டிருக்க
பின் ஒருநாள் புரிவாய் நீ.

உன்னால் ரசிக்காத பூக்களைக் கசக்கிடுவாய்
உன்னால் இயலாத பட்டைகளை உரித்திடுவாய்
மென்மை என்ற இறகு
உன்னில் முளைக்காதவரை

நீ.
நீ.
நீ... ?
பனி என்னைத் தெரியாமல் மூடியது உனக்கு.

¡¡
2003

சமாதானக் குழம்பு

உருவியது பூமி எங்கும்
ஊர்த்தேங்காய் எண்ணெய்
நச்சீரகம்
வெங்காயம்
கறிவேப்பிலை மணம் மூக்கை
தாளித்து மணத்த சமாதானக் குழம்பை.

ஆத்துமா நெஞ்சுக்குள்ளே
விரல் நுனியில் கடத்திய காலம் மறந்து
இடைவெளியில்
ஒரு சிற்றெறும்புக்கு உள்ள
வலிமை கூட இருக்கவில்லை
தொய்ந்து கிடந்தது ஆத்துமா.

சமாதானக் குழம்பு மணத்தது
வண்ணத்துப் பூச்சியும் சந்தோசமாய்ப் பறந்தது
இரவுகள் பூரித்து விடிந்தன
சோதனைச் சாவடி சோம்பலாய்க் கிடந்தன.

தாளித்த குழம்பு தவறி விழுந்த கதையால்
ஆத்துமா திரும்பியது இடத்துக்கு
சட்டி உடைந்தது
சிலாவின குழம்பு
உருவியது பூமி எங்கும்
மணம் புதையுண்டு போயின
மணம் நாசியை உரசிக் கொள்கின்றது.

பெருமூச்சாய் புயற்காற்று கிளம்பியது
முகர்ந்த இரவும்
மாசற்ற பயணமும்
இடிவிழா கிரகமும்
நமக்குச் சொந்தமாகுமா என்று.

ஆயினும் சமாதானக் குழம்பு
தாளித்து இறக்கப்படவேண்டும்
இன்னும்.....
இன்னும்.......
அலுமினியம் பாத்திரத்திலேனும்.

¡¡
2003

மரங்கொத்தி வரலாம் இனி

தென்னையைப் போல வெறும் ஈர்க்குக் குடல்...
இவனிலிருந்து வராது
இதயம், ஈரல், குடலோடு சேர்ந்த உறுப்புக்கள்
உன் சொண்டில் வரும்
நரம்புகளும் அதில் சிக்கும்.

உலாவப் பிறந்தவன் மனிதன்
தென்றலை உடலுக்கள் குடில் கட்டிக் கொடுப்பவன்
இயற்கையை கண்ணுககு விருந்தாளியாய் அழைப்பவன்
ஆயினும் இவன் ஓரிடத்தில் நின்று
வளரும் மரம் போல நகராமல்
அடியைப் பதிக்கவும் அஞ்சிக்கிடக்கின்றான்
தன் கிராமத்து வேரை இறுகப்பிடித்தபடி.

கடல் சார்ந்த இடம்
வயல் சர்ர்ந்த இடம்
யுத்தம் மேய்கின்ற பூமியாகக் கிடக்கிறது.

மொத்தத்தில் இவன் ஜடம்
மரங்கொத்திக் குருவியே நீ வரலாம்
கண்ணிகள் இவனில் புதைக்கப்படவில்லை
தென்னையைக் கொத்திக் காயப்படுத்தி
அதன் உடம்பில் ஓவியம் வரைந்து
'போர்' ஒன்றைச் செய்து
இல்லறம் நடத்தியது போதும் குருவி....

மரங்கொத்திக் குருவியே நீ வரலாம்
நம்பி
துப்பாக்கி உன்னை நோக்கி இல்லை
இவன் உடம்பில் வந்து தங்கு
தோளில் நின்று எச்சில் அடி...
ஒரு போரை வடிவமைக்க
இவன் நெஞ்சிலோ
முதுகிலோ நின்று கொத்து
மரமான இம்மனிதனின்.

¡¡
2003

விருந்தோம்பியின் பாடல்

நெஞ்சுக்குள் வெடித்தது வெடி குண்டு
காலைப் புகைமூட்டம் புரைத்தது
அதிகாரிகளுக்கிடையில் நான்....

மேசையில் விழுந்து சுருண்டது உயிர்
உயிருக்குப் பதவி உயர்வு கொடுத்தேன்
பதவி நிலை அறிந்து
பசுவின் வாலைப்பிடித்து ஓடியது நண்டு.

மழலைகளுக்கு முதல் விழா
மேடையில் அதிகாரி விலாசினார்
சேகரித்த மொழியின் வடிவங்களுக்கு
குப்பையில் குண்டுமணி பொறுக்கினார்.

நான் அதிகாரி அமர்த்திய சாரதி
ஆயினும் அதிகாரிகளுக்கிடையில்.....

வடை ஒன்று வாய்க்குள் உருண்டது
நிலமாக அதிர்ந்தது
மென்று மென்று விழுங்கிட முயற்சித்து
துறைமுக அலையானேன்.

முதல்வர் உரித்து ஊட்டிய வாழைக்கனியொன்று
அதிகாரியின் கிணற்றில் கயிறு அறுந்து
விழுந்த வாளியாய்
நான் அருகில்......

பத்திக்கை கட்டிட முயற்சித்த நான்
என் முகம் மரணித்து.... மரணித்து...
எனக்கென்ற கனி ஒன்று தட்டில் இருபக்கம்
முகம் துலாவி சரிந்தது
முதல்வரின் கைக்கு எட்டாத செய்தி எது?
எனக்கு எது உயர்வான தரமாக வேண்டும்?

மற்றொரு அதிகாரி என்னை
அவர் கண்களால் தூக்கி இருத்தினார்
பாடம் நன்றாக விளங்கியது
அவர் வீட்டில் படித்துக்கொண்டிருப்பார்
மக்களுக்கும் படித்துக் கொடுப்பார்
மனைவிக்கும் விளக்கிப் புகட்டுவார்.

எனக்குள்
அவரைப்படித்தேன்
அவரை உரைத்தேன்
அவரைப் பாடினேன்
விருந்தோம்பல் மயிரளவும் இல்லாத பாடல்
எனக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

¡¡
2002

தென்னையின் வடிவு

அழகிய தென்னை
நன்கு உரமிட்ட உடல்வாகு
காற்றினில் மேயவிட்ட கருமேகம்
தென்னையின் கொண்டையில் சிக்கிக்கிடந்ததாய்
விரித்துக்கிடக்கும்
மயில் அகவி தோகையில் படிந்து.

அக்காலம் இனி.... இக் காலம்
மயிர்போல உதிரும் மனிதன் உயிர்போல
காலாலே உதைத்துப் பார்க்கும்
குரும்பை ஒன்றுக்குள் குளிர்நீர் நா நனைய
தாகத்தை நாக்கில் சுமக்கும் அண்டங்காகம்

தேங்காயின் விலை பற்றி
சுழற்காற்று சொல்லுமா?
அது போடும் ஜாலம் புரியுமா?
பேயாட்டம் அது ஆடும் போது
பக்கத்து வீட்டு கூரை கத்துவதுகேட்டே
அதன் கழுத்தில் அரிவாளை வைத்தேன்.

பாளை வெட்டி
செப்புக் குடத்தில் அவள் சிரிப்பாக அதை விரித்து .....
உலர்ந்து கழன்று போகும்வரை
மணவறையில் அது இருக்கும் வடிவு
சொர்க்கத்தில் மனம் ஒருமிக்க
அக்கால மலர்கள்.

அழகோடு சங்கமிக்க அனுபவங்கள்
தென்னையின் குருத்து அறையில் அழகுடனே
முட்டிப்பாய்ச்சியது நீறாறு விழிமடலை
'மரமேறி' சரித்து வடித்தான்
நெற்றியில் பூவல் தோண்டி.

காதலி உலரவிட்ட சேலைபோல
குருத்தோலை விரிந்து நெஞ்சை நிறைக்கும்
காமம் காற்றோடு ஆடும்
காய்க்கிறது குலை கட்டி
மண்முட்டிகளாய் அதன் உருவம்
எக்குயத்தி தென்னையிலே ஏறினாளோ

அழகிய தென்னை
என்காதலியின் ஒய்யாரம் தெரிகிறது
காக்கையைப் பற்றிய கனவொன்றும் பாய்ந்தது
கரையும் காக்கைகளில்
சோக முகத்தோடு ஒரு காகம்
மின்; கம்பமொன்றில் தொங்குவது கண்டேன
எவன் அடித்துவளத்தினானோ
வாசலைப் பெருக்கி
மீன் குடலை அவித்து உண்டு
அது வாழ்ந்த தென்னை ஞாபகத்தை நடுகிறது
இன்னொரு பிள்ளையாக.

¡¡
2002

நெருப்பு நெருப்பு

இன்னும் சாம்பலாகவில்லை
என் குழந்தைகள் அப்பம் சுட்டு விளையாட.
ஆயிரம் வீடுகள் எரிந்தபோதும்
சூரியன் அழுதான் மிஞ்சியதாக
என் தலையில் உமிழ்ந்த நெருப்புத் தணல்
என் கிராமத்தின் மூலையில்
பழுத்த ஒரு ஓலையையும்
அது முகர்ந்த கதை பேசும்
இனியும்
n'லி இந்தப்பக்கம் வரக்கூடாது
யுத்தம் மாவரைக்கத் தொடங்கினாலும்

என்னை ஆறுதல் படுத்த எதுவும்
முன்வந்த செய்தியும் இல்லை
இதுவரை அதை அணைத்து
இந்த மனிதன்
யாருக்கும் புதிராக
யாருக்கும் சுடராக இருந்தானா?
இல்லை
கீச்சிடும் அணிலாக
சீறிடும் பூனையாகவே
எல்லாம் மாறிக்கிடக்க.

கவுண்ட உலக வடிவம்
துப்பாக்கியாலும்
குண்டுகளாலும் செதுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

நெருப்பினால் மெழுகப்பட்ட பூச்சுக்கள்
அது முட்டையையோ
உமிழ் நீரையோ
நெருப்புத் தணலையோ
என்னில் வீசிச் செல்லவேண்டாம்.

நெருப்பு
நெருப்பு
இதயத்தில் அடுப்பு மூட்டி எரிக்கும் சூரியன்
இவனுக்கு ஆறுதல் எல்லாம்
பூக்களும்
முகில்களும்
தென்றலும் தான்.

எந்த வடிவத்திலும் n'லி இந்தப்பக்கம்
வரவே கூடாது
கண்டிப்பான உத்தரவு
நெருப்புக்கும்
காற்றுக்கும்
கடலுக்கும்
அடையாளமிடப்பட்ட என் கிராமம்
ஹெலி என்றாலே துனுக்கிடுகிறது
நரிவிரட்டிச் சிரிக்கிறது.

¡¡
1999

கறிவேம்பில் நிலவு

நிலவு மணத்தது எனக்கு
பூமரத்தில் தெத்தி
பின் கறிவேம்பில் தங்கியதை
நிலவின் மணத்தில் அறிந்தேன்.

வாசலில் நிலவு முடிகிளறியது
பேன் பொறுக்க காக்கையை அரட்டியது
நிலவுக்கு பிரியமுள்ள இடம்
அந்தப்புர நாயகியோடு சங்கமித்து ....
சிலநேரம் நடுச்சாமம் பிரசன்னமாகி
தூங்கிச் செல்லும்.

நிலவுக்கு என்னைத் தெரியும்
என் குரல் வளையில் அமுதைப் பனித்து
ஒரு காலத்தில் பிடிந்த சோற்றுப் பிடிகளை
எனக்கு ஊட்டியதிலிருந்து.

உம்மா அழைத்து
என் கையில் தந்ததிலிருந்து
அழுகைக்காக உயிர் மாமாவாக.....
இப்போ இந்த நிலவோடு
கடற்கரை வெளியில் கைகோர்க்க
எண்ணம் உண்டு.
என் குடும்பத்தோடு சென்று உறவாட
ஆசை அதிகம்.

கச்சான் கொட்டையும்
கடலைப் பருப்பும் பரிமாற
நிலவு, இந்த யுத்த பூமியில்
விழுந்து கிடப்பதைப் பற்றித்தான்
என் ஆத்மாவுக்கு அவதி
நிலவு புனிதம் நிறைந்த ஒரு பிள்ளை
அழகு பெண்போன்ற முகமுடையதே நிலவு
நாளை என்றோ ஒரு நாள்
ஒரு வெளியிலிருந்து
என் காதல் மொழியை
உன் ஒளியில் எழுதிப் பார்ப்பேன்.

ஆயுதங்கள் உன்னைச் சுட்டு வீழ்த்துவதற்குள்
குண்டு வெடிப்பில்
உன் செவிகள் ஊனமுறுவதற்குள்
அவையவங்கள் முறிந்து தொங்குவதற்குள்
உன் அழகு காயப்பட்டுக் கிடப்பதற்குள்
நான் உன் கைகளுடன் கோருட்டுக்கிடப்பேன்
ஒரு மனிதனாக.

நிலவு மனத்தது எனக்கு
பூமரத்தில் தெத்தி
பின் கறிவேம்பில் தங்கியதை
நிலவின் மணத்தில் அறிந்தேன்.

¡¡
1999

உதட்டில் மூட்டும்
கொள்ளியடுப்பு

உடலுக்குள்ளே முகில் கூட்டம்
ஆகாயத்தைப் போல
தினம், தினம் என
எந்தக் குளத்து சுருப்புக்குள்
சூரியன் விரல்விட்டு
குடைந்ததோ தெரியா
உடலுக்குள்ளே முகில் கூட்டம்
கடலும்
காடும்...

மூட்டும் கொள்ளியடுப்பு அடுத்த வீட்டவனுக்கும்
எரிந்து சாம்பலாகியது
சுவாசப் பைக்குள்

பக்கத்தவனின் புரையேறல்
மயக்கம் தெளியும் வரையும்
யாருக்குத் தெரியும்
தலையைச் சுற்றுவது முகில் என்று.

இழுப்பது, மூக்கு வழி கக்குவது
சுதியேறிக் கழிவது போதுமானது
போதைக்குள்
ஆயிரம் குடில்கள் எரிவது
ஆயிரம் நலவுகள் சாவது
மூட்டும் அடுப்போடு முடியும்.

பூனை சுருளும் போது
மிச்சமாய் இல்லை என்று இவன்
காசுப் பை அழுதே கேட்டது.

உயிரோடு போராடி
கூட்டமாய்ச் சுற்றிய முகில்
இவனுக்குள் பெய்த மழையோடு
சங்கமமாகின
பக்கத்து வீட்டவனும் சுவாசிக்க
இருமத் தொடங்கியுள்ளான்.

பஸ் ஏற ....
இரயில் ஏற எல்லாம்
இப்போது
மனிதனைச் சுற்றிய
எரிந்த கொள்ளிகள் புகைகின்றன.

¡¡
2001

நிலப் பந்துக்குள்.

யாரும் அழ
யாரும் பூக்க
யாரும் உதிர
யாரும் துணையில்லை.

ஒரு நிலப் பந்துக்குள்
பூனைகள் சீறுவது
பாம்புகள் விஷம் ஏற்றுவது
எருமை முக்காரமிடுவது
யானை பிளிருவது ....

நிலவு புண்படுவது ....
சகஜம் சகஜம் தான்.

யாரும் அழ
யாரும் பூக்க
யாரும் உதிர
யாரும் துணையில்லை.

சவர்க்கார நுரையினுள்
மனத்தைத் தொலைத்துத் தேடிய
வறுமை இன்னும் கசக்குவது
பேனாவைக் குத்தினேன்
குரல்வளை சென்றது
திரும்பிக் கத்தியது.

பின்னால் உறுமும்
வாகன நெரிசலில் தவிக்கின்ற உயிர்களை
மெல்ல காற்றுக்கு அனுமதிகோரி,

புழுத்துப்போன ஆக்ரோசம்
மீண்டும் ஒரு உண்மைக்கு
எவ்வாறு அடித்தளமிடும்.

அலாதியான இயைபுடனே
என்தொட்டில் பாடுகிறது
என் வண்டில் ஓடுகிறது
என் வானம் வெளிக்கிறது.

இருள் விலகி ...
எரிகின்ற காடு அணைந்து ...
பசுமை வயல் வெளியில்
என் குருவிகள் கீச்சிட்டுப் பறக்க
பிரார்த்தனை புரிவதே தேவை..

அறியாமை வீதியில் இன்னும்
ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களிடம்
யாரும் அடையாள அட்டை கேட்பதற்கில்லை.

யாரும் அழ
யாரும் பூக்க
யாரும் உதிர
யாரும் துணையில்லை
படைத்தவன் படி அளந்து கொண்டிருக்கிறான்.

¡¡
2002

ஒரு பிடி உயிர்

பொது விளக்கை கற்களால்
அணைக்க முயல்பவர்களே!

பாறைகளாய்ப் போன கட்டிட இடிபாடுகளுக்குள்
ஒரு பிடி உயிருடன் வாழ்கிறேன்
ஒரு சிட்டுக் குருவியாய் என்னைவிட்டும்
உயரப் பறந்திட இந்த மூச்சு காத்துக்கிடக்கிறது.

தாமரையாய் என்னிதயக் குளம்
கடல் நீரால் கருகி
தெளிந்து சிறு அலை
என்னுள் எழுந்து மடிகின்றன
நிகழ் வாழ்வும்
சக வாழ்வும்

முகத்தில் சிரிப்பு இத்துப்போய்
காரிருள் படர்ந்த வெளியாக
முடிந்து போன உலகத்தை
போர்த்திச் சென்ற கடலால்
என்னூர்
ஆண்மையை இழக்கவில்லை
கடல் வளர்த்த பூமியைத்தான்
ஆக்கிரமித்தது.

புத்தியாய் ஊருக்குள் படையணி திரட்டி
ஒரு மேடைக்கு அழுகின்ற வாய்பைப் பூட்டி
மக்கள் பெற்ற குழந்தைகள் விம்முவார்கள்.

N.பு.ழு க்கள் விதைத்த
கூடாரங்களின் முதுகில் குத்தி, குத்தி.

மக்களின் வெறுமை
கடலோரமும்
குளத்தோரமும் முளைக்கின்றன
பிசாசுகளின் கரங்களில் இருந்து விடுபட்டு
ஒரு பிடி உயிருக்காக
பொய்மையிலிருந்து விடுபட முயற்சிக்க.

மக்களே!
பொது விளக்கை கற்கலால்
அணைக்க முயல்பவர்கள் ......
நாளை ஒருவன்
யானையில் வருவான்
பூனையில் ஏறுவான்.

¡¡
2005

வெங்காய மூட்டையில்
கிளறிய மூளை

அழுகிய கொச்சிக்காய்
அடித்தது வாடை
மூக்கைத் துளைத்து குத்தியது முதுகில்
சொல்லிக் கத்தினான் விற்றவன்
தோலை உரித்து உரித்து
வெங்காய மூளை என்றும் சொன்னான்
விட்டிலின் தலைக்குள்.

வருந்தி அழுதேன்
ஓரு குடம் தண்ணீரை
கண்களால் கெளித்தேன்
எழுந்த வியர்வை வடிந்து
கால் வழி வந்து
துளை ஒன்றில் புகுந்து கொண்டது.
பட்டுத் தொங்கியது
அவன் அறிவுப் பழுத்தோலை.

எறும்பையும் ஏசினான்
பூவையும் வதைத்தான்
மீண்டும் உரைத்தான்
என்
உரலினுள் போட்டு இடித்தான்.

குடல் உருவி வாசித்தேன்
மணத்தது என்றேன்.

தராசியைத் தட்டி
தூசியாய்ப் பறந்தது
மக்களின் வாக்குகள் என்றான்
மீண்டும் அடித்தது வாடை
அந்த சந்தை புழுத்தது.

நாளை ஒரு மேடை
வர்ணமாய் ஜொலிக்க
பதில் சொல்லும் என்று
வெங்காய மூட்டையை கிளறினான் வியாபாரி
அதிரும் ஒரு தும்மலுடனும்;
ஒரு சீறலுடனும்.

¡¡
2001

தூய்மை படிந்து உதறி

கண்டு மகிழாத அழகுக்குள்
மனத்தை உசுப்பியது தென்றல்
படர்ந்த கொடி கருகிய போதுதான்
ஆணிவேரின் பலம் அறிந்தேன்.

இலட்சணம் அற்ற உள்ளுணர்வுகள்
மேவி வரும் போதெல்லாம்
சுழலும் குப்பைக் காற்று
கண்களுக்குள் புதைகின்றன
நேசம் குழுமி ஒரு வடிவத்தைப் படைக்க
நம்மை இழந்து நிற்க வேண்டியதாயிற்று.

பூமிக்குள் உருப்பெறும் பூகம்பங்களுக்கும்
நமக்குள் வடிவாகும் அதிர்வுகளுக்கும்
எங்கே அளவுகோல் என்று
விஞ்ஞானி முழிக்கிறான்.

ஒருவனும் சிரிப்;பதாகத் தெரியவில்லை
ஒருவனும் அழுவதாகவும்; தெரியவில்லை
மனசுகளுக்குள் மாபெரிய மலைகள்
புகைக்கின்றன.

ஒரு வெளி அசைவதும்
ஒரு மாயை தெரிவதும்
விழிகளைக் கசக்குகின்றபோது.....

ஒற்றையாய்ச் சுற்றும் பருந்துக்கு
பேட்டினுள் மறையும் குஞ்சு உணவாக
எதுவும் ஆசை தீர்ப்பதில்லை
எதிலும் பாசம் மொய்ப்;பதில்லை.

பிசைந்த விரல்களுக்குள் மூளை
பேசுகின்ற போது
நலம் மேலோங்கி இருக்கும்
இமை உயிருடன் ஆயிரம் பேசும்
உரோமக் கண்களுக்குள்ளும்
வறண்டிராத பெரு மூச்சு பாய்கிறது.

ஆயிரம் கனவுகளுக்குள்ளும்
ஒரு கனவு மெய்ப்பட
தவங்கிடந்தே காலம் கரைகிறது
படைத்தவன், எவருக்கும் பாரங்கல்லை
தலையில் வைப்பதில்லை
மண்டைத் சுவட்டில் அவன் மொழி
பேசிக் கொண்டிருப்பதே முடிவு.

ஆயினும்
தூய்மை மனிதனில் படிய வேண்டும்.

¡¡
2001

எனது பின்வரிகள்

கடிவாளம் என் குதிரைக்கு மட்டுமல்ல

கணக்குப் பாடம் வேப்பங்காய் மாதிரியாவதற்குள் தேனைத் தடவிய குரு மருதூர்பாரி அவர்களை நினைவுக்குள் நிரந்தரமாக்கியதைப் போல அநேக அத்திவாரங்கள் என்னுள் பலமாக இடப்பட்டுள்ளன. அடிக்கடி உடைப்பெடுக்கும் என் நிறை கங்கை பாய்ந்துகொண்டிருக்க நிழல் வாகையின் கீழ் நான் பாடிய கவிதைகள் இன்னும் ஊறிக் கொண்டிருக்கின்றன மனசில்.

பற்றைக் காடுகளில் பயணிக்கும் போது மேலாடைகளைக் கிழிக்க முயற்சித்த சூரைப்பற்றைகளின் கரங்களிலிருந்து விடுபட்டு, தப்பித்து மிரடுமிரடாய் நீர் பருகிய காலங்கள் மிருதுவாக என்னுள் ஊர்ந்து கரைகின்றன. என் கவிதை தேசத்தின் நிலம்.

போலி ஆசனங்களில் தனது இருப்பு, நிலையான மேதாவிகள் என்ற மாயையைத் தனக்குள் இருக்கப்படுத்தி உலக அழிவுகளுக்குள் இயங்க விளையும் கொடுங்கோன்மை போல எனது கவிதை இருக்க இயலாது. மனிதம் என்ற காய்ந்த இலை மயானத்தில் சிறு காற்றில் ஒதுங்குவது யாருக்குப்; புரியும்? நமது விழிகள் கரிக்கப்பழகியவை தான்.

எனது பின்வரிகளையும் சுத்தமாகவே காண விரும்புகிறேன். மேலாண்மை அதிகரித்து கர்வத்தின் அடையாளம் தலையில் ஏறி நிலையற்று பரிதவிக்கும் நேரம் சுழலாமல் போகாது. மனிதனைச் சுற்றும் குளவிகள் அதிகமான காலம் இது.

குருட்டுப் பறவைகள் மாலைக் கருக்களில் வலம் வரும். மெல்லிய சிவப்பும், சாம்பல் நிறமும் படருவதற்குள் ஒட்டு மாங்காயில் ஆசை பாய்ந்து மாலைக் கோட்டின் இருளாகச் சூழ கைதடவி மணம் எடுத்து மூக்குத் துவாரங்கள் மெல்லமெல்ல சுவாசிக்கும். குறுக்காக வந்து முட்டிய குழுக்கள் மாமரத்தை உதாசீனம் செய்ய இருளே மீண்டும் வெளவாலுக்கு வழிகாட்டும். ஆயினும் என் கவிதைகள் பனையோலைப் பெட்டிக்குள் கரப்பான் பூச்சிபோல கரகரத்துக் கிடந்தன. பலஆண்டுகள் உடும்பின் பலமாக.

பழத்தின் உள்ளீடு மீண்டுமொரு முளைப்புக்கு தளிர்விட்டு நின்றது. மனிதனுக்கு என்று ஒன்றுமே இல்லாத அண்டவெளியிலும் இருந்து சொட்டு சொட்டாக கவிதை வடியும். இடியுடன்கூடிய ஒளிப்பிழம்பின் கூர்மையான பார்வையிலிருந்து நழுவி தன் தாயின் மடிக்குள் அடையும் குழந்தையின் அச்சம் அந்த அற்புதத்தைக் காண்பிக்கும்.

ஓட்டைக் கட்டடத்தின் வழியே ஆதவனின் அவலம் மெல்லத் தெரிந்தது. இலக்கியத்தின் போதிய இடைவெளிக்குள் பாய்கின்ற விருப்பு வெறுப்புக்கள் மனிதனின் உணர்வின் ஆளுமையைப் பொறுத்ததுதானா? கடுவன் பூனையின் நடையிலும் கவிதை உண்டு. மயிர் கொட்டியின் நெளிவிலும் அது ஊறும் என்று காகமும் படித்து அறிந்ததுதான்.

சாலையில் உரசி செருப்பில் மண் புடைத்து நடக்கின்ற பக்குவமும் பூனையின் பதுங்கலுடன் புல்லுக்கும் நோகமல் நடக்கின்ற பக்குவமும் மனத்தை அசுத்தப்படுத்துமா? கவிதை எல்லா வகையான கைகளிலும் நடக்கும். அவரவருக்கு ஏற்றாப் போல குதிக்கும். பானையில் பொங்கி வழிவதும் நிஜம். தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாகக் கவிதை மொழியாடல் மாட்டுகையில் யாரையும் விடுமா? வரப்புமீறிப் பாயாத நீராக இருக்கையில், மண்வெட்டியுடன் கவிதை விவசாயி எங்கிருந்தோ வருவது, அவன் பாiஷக்குப் பாய்ச்சுவது எவரையும் நோகாமல் இருக்காது. கவிதை கண்களுக்குள் பாய்ந்து மனசுக்குள் மாளிகை கட்டுவது.

பருப்புக் கறிக்கும் பாணுக்குமுள்ள உறவுதான் எனக்கும் என் கவிதைக்கும் உள்ள உறவு. யானைப்பொறியில் அகப்பட்ட என் கவிதைகளுக்கும் உயிர் இருக்கும். ஏதாவது ஒரு வரியின் நரம்பில் அது ஓடும் என நம்புகிறேன். நாடிபிடித்துப் பார்த்தால் அதன் வேதனை புரியும். எந்த வைத்திய நிபுணர்களும்; கவனம் எடுக்கவேண்டிய மூட்டுவலியும், முதுகுவலிப்பும், தசைப் பிடிப்பும் என் கவிதைகளுக்கும் இருக்கலாம்.

கவிதைகளுக்கு கல்நெஞ்சம், ஓசி எனின் உப்பில்லாமல் நுகர்தல், அடாவடி, அட்டகாசம், இறந்த புன்னகை, மதியாத கனம், நாவுக்கும் மூளைக்கும் ஒட்டாத உரை, உள்ளொன்று புறம் வேறொன்றுமான வெளிச்சம், வம்புக்கு அழைப்பு என கறுப்புக் குணங்கள் இருக்காது. கவிதைகள் சிப்பியின்; முத்துக்களாகும்.

எலியின் கடிப்பு வலியைவிட எறும்பின் கடிப்பு வலி அதிகம் தான். மெல்ல எழுந்து நடக்கப்பழக்கியிருக்கிறேன் என் கவிதைகளை. நேர்மையை உணர்த்த முயற்சித்திருக்கிறேன். போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து எல்லா அனுகூலங்களையும் பெற நல்ல கவிதைக்குத் தெரியாது. பரும்படியான தேவைகளுக்கும் அதில் இடம் கிடையாது.

அன்பர்களே! கவிதையின் சட்டவல்லுநர்களே! கடிவாளம் என் குதிரைக்கு மட்டுமல்ல, என் கவிதைக்கும் உண்டு.

அரமியத்திலிருந்து
டீன்கபூர்
07.01.2007