எனது பின்வரிகள்

கடிவாளம் என் குதிரைக்கு மட்டுமல்ல

கணக்குப் பாடம் வேப்பங்காய் மாதிரியாவதற்குள் தேனைத் தடவிய குரு மருதூர்பாரி அவர்களை நினைவுக்குள் நிரந்தரமாக்கியதைப் போல அநேக அத்திவாரங்கள் என்னுள் பலமாக இடப்பட்டுள்ளன. அடிக்கடி உடைப்பெடுக்கும் என் நிறை கங்கை பாய்ந்துகொண்டிருக்க நிழல் வாகையின் கீழ் நான் பாடிய கவிதைகள் இன்னும் ஊறிக் கொண்டிருக்கின்றன மனசில்.

பற்றைக் காடுகளில் பயணிக்கும் போது மேலாடைகளைக் கிழிக்க முயற்சித்த சூரைப்பற்றைகளின் கரங்களிலிருந்து விடுபட்டு, தப்பித்து மிரடுமிரடாய் நீர் பருகிய காலங்கள் மிருதுவாக என்னுள் ஊர்ந்து கரைகின்றன. என் கவிதை தேசத்தின் நிலம்.

போலி ஆசனங்களில் தனது இருப்பு, நிலையான மேதாவிகள் என்ற மாயையைத் தனக்குள் இருக்கப்படுத்தி உலக அழிவுகளுக்குள் இயங்க விளையும் கொடுங்கோன்மை போல எனது கவிதை இருக்க இயலாது. மனிதம் என்ற காய்ந்த இலை மயானத்தில் சிறு காற்றில் ஒதுங்குவது யாருக்குப்; புரியும்? நமது விழிகள் கரிக்கப்பழகியவை தான்.

எனது பின்வரிகளையும் சுத்தமாகவே காண விரும்புகிறேன். மேலாண்மை அதிகரித்து கர்வத்தின் அடையாளம் தலையில் ஏறி நிலையற்று பரிதவிக்கும் நேரம் சுழலாமல் போகாது. மனிதனைச் சுற்றும் குளவிகள் அதிகமான காலம் இது.

குருட்டுப் பறவைகள் மாலைக் கருக்களில் வலம் வரும். மெல்லிய சிவப்பும், சாம்பல் நிறமும் படருவதற்குள் ஒட்டு மாங்காயில் ஆசை பாய்ந்து மாலைக் கோட்டின் இருளாகச் சூழ கைதடவி மணம் எடுத்து மூக்குத் துவாரங்கள் மெல்லமெல்ல சுவாசிக்கும். குறுக்காக வந்து முட்டிய குழுக்கள் மாமரத்தை உதாசீனம் செய்ய இருளே மீண்டும் வெளவாலுக்கு வழிகாட்டும். ஆயினும் என் கவிதைகள் பனையோலைப் பெட்டிக்குள் கரப்பான் பூச்சிபோல கரகரத்துக் கிடந்தன. பலஆண்டுகள் உடும்பின் பலமாக.

பழத்தின் உள்ளீடு மீண்டுமொரு முளைப்புக்கு தளிர்விட்டு நின்றது. மனிதனுக்கு என்று ஒன்றுமே இல்லாத அண்டவெளியிலும் இருந்து சொட்டு சொட்டாக கவிதை வடியும். இடியுடன்கூடிய ஒளிப்பிழம்பின் கூர்மையான பார்வையிலிருந்து நழுவி தன் தாயின் மடிக்குள் அடையும் குழந்தையின் அச்சம் அந்த அற்புதத்தைக் காண்பிக்கும்.

ஓட்டைக் கட்டடத்தின் வழியே ஆதவனின் அவலம் மெல்லத் தெரிந்தது. இலக்கியத்தின் போதிய இடைவெளிக்குள் பாய்கின்ற விருப்பு வெறுப்புக்கள் மனிதனின் உணர்வின் ஆளுமையைப் பொறுத்ததுதானா? கடுவன் பூனையின் நடையிலும் கவிதை உண்டு. மயிர் கொட்டியின் நெளிவிலும் அது ஊறும் என்று காகமும் படித்து அறிந்ததுதான்.

சாலையில் உரசி செருப்பில் மண் புடைத்து நடக்கின்ற பக்குவமும் பூனையின் பதுங்கலுடன் புல்லுக்கும் நோகமல் நடக்கின்ற பக்குவமும் மனத்தை அசுத்தப்படுத்துமா? கவிதை எல்லா வகையான கைகளிலும் நடக்கும். அவரவருக்கு ஏற்றாப் போல குதிக்கும். பானையில் பொங்கி வழிவதும் நிஜம். தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாகக் கவிதை மொழியாடல் மாட்டுகையில் யாரையும் விடுமா? வரப்புமீறிப் பாயாத நீராக இருக்கையில், மண்வெட்டியுடன் கவிதை விவசாயி எங்கிருந்தோ வருவது, அவன் பாiஷக்குப் பாய்ச்சுவது எவரையும் நோகாமல் இருக்காது. கவிதை கண்களுக்குள் பாய்ந்து மனசுக்குள் மாளிகை கட்டுவது.

பருப்புக் கறிக்கும் பாணுக்குமுள்ள உறவுதான் எனக்கும் என் கவிதைக்கும் உள்ள உறவு. யானைப்பொறியில் அகப்பட்ட என் கவிதைகளுக்கும் உயிர் இருக்கும். ஏதாவது ஒரு வரியின் நரம்பில் அது ஓடும் என நம்புகிறேன். நாடிபிடித்துப் பார்த்தால் அதன் வேதனை புரியும். எந்த வைத்திய நிபுணர்களும்; கவனம் எடுக்கவேண்டிய மூட்டுவலியும், முதுகுவலிப்பும், தசைப் பிடிப்பும் என் கவிதைகளுக்கும் இருக்கலாம்.

கவிதைகளுக்கு கல்நெஞ்சம், ஓசி எனின் உப்பில்லாமல் நுகர்தல், அடாவடி, அட்டகாசம், இறந்த புன்னகை, மதியாத கனம், நாவுக்கும் மூளைக்கும் ஒட்டாத உரை, உள்ளொன்று புறம் வேறொன்றுமான வெளிச்சம், வம்புக்கு அழைப்பு என கறுப்புக் குணங்கள் இருக்காது. கவிதைகள் சிப்பியின்; முத்துக்களாகும்.

எலியின் கடிப்பு வலியைவிட எறும்பின் கடிப்பு வலி அதிகம் தான். மெல்ல எழுந்து நடக்கப்பழக்கியிருக்கிறேன் என் கவிதைகளை. நேர்மையை உணர்த்த முயற்சித்திருக்கிறேன். போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து எல்லா அனுகூலங்களையும் பெற நல்ல கவிதைக்குத் தெரியாது. பரும்படியான தேவைகளுக்கும் அதில் இடம் கிடையாது.

அன்பர்களே! கவிதையின் சட்டவல்லுநர்களே! கடிவாளம் என் குதிரைக்கு மட்டுமல்ல, என் கவிதைக்கும் உண்டு.

அரமியத்திலிருந்து
டீன்கபூர்
07.01.2007

No comments:

Post a Comment