கவிதைகள் வெறுமனே கண்களால் வாசிப்பதற்கு மட்டுமன்று; எண்ணி ஆய்ந்து உணர்வதற்கும், கணிதமாகித் தீர்ப்பதற்கும். சொல்லவரும் செய்திகள் வரிகளிலே அப்படியே வரையப்பட்டிருக்கும் என்பதன்று; வாசகரும் தேடிக்கண்டு விளக்கங்கொண்டு மகிழ்வாராக.
அன்று ‘டீன்கபூர்’ கண்ட ‘குரோட்டன் அழகி’ யைத் தொடர்ந்து, அல்லது விட்டுவிலகி இன்று தருகின்ற ‘திண்ணை’ பாய்விரித்த இரண்டாம் தொகுதிக் கவிதைகள் இப்படியாய் இருக்கக்காண்பீர்.
தனதான ஆத்திரங்களை, சகிக்க முடியாமைகளை புதியபுதிய சொற்சித்திரங்களால் காட்டுகின்றார். சமுதாய அவலங்களைச் சாடி, தேர்தல்கால தகிடுதத்தங்களை நையாண்டி செய்கிறார். யுத்தவெறுப்பு, சமாதான ஏக்கம் எல்லாமே டீன்கபூரின் கவிதைக@டே பயணிக்கின்றன. தன்னுணர்வு சார்ந்த, தனிமனித உணர்வுகள் பாற்படும் பல கவிதைகளைக் காணும் நாம் - அழகியல் உணர்வுமிக்க கவிதைகளையும் தரிசிக்கலாம். இயல்பாக வந்துவிழுந்துள்ள உருவகங்கள், படிமங்கள் என்பவற்றையும் நிறையவே சந்திக்கலாம்.
டீன்கபூரின் சொற்சிலம்பங்கள் உடனடிப்புரிதலுக்கு உட்படாததாய் இருக்கக்கூடும். அவசரம் காணாது, ஆறஅமர்ந்து வாசித்துப் போனால் வகைவகையான புரிதல்கள் நிகழும்.
அழகியதாய், எளிமையானதாய் தொகுதியை ஆக்க வேண்டுமென்ற ஆழமான அவாவுடன் டீன்கபூரே எல்லாவற்றையும் கணினி செய்துள்ளமையும் சொல்லவேண்டிய செய்தியே.
அறநிலா
05.01.2007
No comments:
Post a Comment