கருத்துரை :

இணையத் தமிழுக்கு ஓர் அணி

தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் மிகப்பாரிய வளர்ச்சி அடைந்துள்ள இணைய ஊடகத்தில் இணையத் தமிழும் அதிக வளர்ச்சியை அடைந்துள்ளதெனக் கூறலாம். அந்தவகையில், 'திண்ணை' இணையச் சஞ்சிகையில் வெளியான தனது கவிதைகளை நண்பர் டீன்கபூர் 'திண்ணைக் கவிதைகள்' என்னும் தலையங்கத்தின் கீழ் ஒரு கவிதைத்; தொகுப்பாக உருவாக்கி இருக்கின்றார். இவரது சில கவிதைகளைத் 'தினமுரசு' வாரவெளியீடும் இணையத்திலிருந்து எடுத்து பிரசுரித்திருக்கின்றது. இது இவரது இரண்டாவது தொகுப்பாகும். முதலாவது தொகுப்பு 'குரோட்டன் அழகி' என்பதாகும்;. அந்தத் தொகுப்பில், இயற்கையை ஆனந்தித்தும், இழந்துபோன இயற்கையை நினைத்து துக்கித்தும், தனது இளமையை மீட்டியும் இருந்தார். அதிலிருந்து வேறொரு தளத்திற்குள் திண்ணைக் கவிதைகள் மூலம் டீன்கபூர் சென்றிருக்கின்றார்.

திண்ணைக் கவிதைகள் இயற்கைப் பிரிவு, அதன் அரசியல், நாட்டு அரசியல், அதன் போலித்தனம், வக்கிரத்தனம், அரசியல்வாதிகள், சுனாமியின் அரசியல், சுனாமி அகதி வாழ்வின் நெருக்குவாரங்கள், யுத்த அவலம், சமாதானத்திற்கான ஏக்கம் பற்றியெல்லாம் பேசுகின்றன.

'எங்கே என் அம்புலி' என்ற கவிதையில் தொலைந்து போன அம்புலியை டீன்கபூர் தேடும்போது,
அச்சம் முகத்தைக் காய்த்து
இதயத்தில் செட்டை முளைத்து
பொழுது பொழுதாய் அடித்து,
தெருவும் திசையும் வேறுவேறாய்..
என்ற அழகான கவித்துவம் மிக்க வரிகள் கிடைக்கின்றன.

'கடலின் அகதி' அகதி வாழ்வின் நெருக்குவாரங்களையும், சுனாமியினால் வீடிழந்தோர்படும் அவதிகளையும் அல்லல்களையும் பேசுகின்றன.
மருதையின் பல கிளைகள் ஒடிந்தபடி
கிடக்க..
ஏழையின் கண்ணீர் செல்கிறது
இடிந்த கட்டிடங்களை
நனைத்து.. துவைத்து..
என்ற வரிகள் அவர்களின் அல்லல்களை கண்முன்னே கொண்டுவந்து காட்டுகின்றன.

'உலகம் நசிந்து' என்ற கவிதையில்,
கனவுகளை பாம்புகள் தின்ன
சுவாசிக்கும் மனிதனாக மட்டும்
நான் இருக்கிறேன்.....
என்று டீன்கபூர் உலக ஒழுங்கை ஆத்திரம் கொண்டு இயலாமைப்படுகிறார்.

'கிணற்றுத் தும்பி படியிறங்கி' என்ற கவிதையில்,
குறுக்குக் கோழிக்கு கூந்தலைக் கட்டி
விரட்டவும் பயமாக, பயமாக..
என் வெளி உலகம்
குடியிருக்கும் என் வளவாய் சுருங்கி..
சுருங்கி..
நான் இருக்கிறேன்.
இந்தவரிகள் அச்ச உணர்வுடன் கூடிய ஏமாற்றத்தை அழகாகக் காட்டுகின்றன.

இத் தொகுதியிலுள்ள மிகச்சிறப்பான கவிதைகளுள் 'கனவின் துண்டு' ம் ஒன்றாகும். சரியலிசப் போக்குகளையும், மெஜிக்கல் றியலிசப் போக்குகளையும் இக் கவிதையில் காணக்கூடியதாக கிடக்கிறது.
கனவின் துண்டுகளை
இரவின் பாதிக்குள்
புதைத்து விழிப்பதற்குள்
நரகத்து மொழியின் விபரீதம்
இன்னமும் செவிகளை நசுக்கின.....
என்னும் வரிகளிலுள்ள சொற்கட்டு, படிம அழுகு என்பன ஏமாற்றம், ஆற்றாமை போன்ற பெரிய அதிர்வலையை உருவாக்குகின்றன.

'தென்னையின் வடிவு' என்ற கவிதைக்குள் அதன் இலைகள் வேறு திக்குகளுக்குள் போவது போல வேறு அனுபவங்களை பெற்றுக்கொள்ள முடிகிறது.

அழகிய தென்னை
என் காதலியின் ஒய்யாரம் தெரிகிறது
காக்கையைப்பற்றிய கனவொன்றும்
பாய்ந்தது
கரையும் காக்கைகளில்
சோகமுகத்தோடு ஒரு காகம்
மின் கம்பமொன்றில் தொங்குவது கண்டேன்.
எவன் அடித்து வளத்தினானோ.
வாசலைப் பெருக்கி
மீன்குடலை அவித்து உண்டு
அது வாழ்ந்த தென்னை ஞாபகத்தை
நடுகிறது.
இன்னொரு பிள்ளையாக.....
என்று ஒரு துன்பியல் முடிவோடு தென்னைக்கு அப்பாலும்; முடிகிறது.

நிலவை யுத்த பூமியிலிருந்து மீட்டு, அதன் தூய்மையை ஊட்டி, அதன் புனிதத்தை காக்க 'கறிவேம்பில் நிலவு' இல் டீன்கபூர்,
நிலவு, புனிதம் நிறைந்த ஒரு பிள்ளை
அழகு பெண் போன்ற முகமுடையதே நிலவு
நாளை, என்றோ ஒரு நாள்
ஒரு வெளியிலிருந்து
என் காதல் மொழியை
உன் ஒளியில் எழுதிப் பார்ப்பேன்.
என்ற வரிகள் அழகான கவித்துவ வீச்சுள்ள வரிகளாகும்.

டீன்கபூரின் கவிதைகள் கனவுக்கும் யதார்த்தத்துக்கும் இடையிலான உணர்வுகள் வெளிப்பட்ட மனநிலையில் புனையப்பட்டவைகளாகும். இவரின் கவிதைகளில் சர்ரியலிச, மெஜிக்கல் ரியலிசப் போக்குகளை அவதானிக்க முடிகிறது. பிம்பமாற்றம், தளமின்மை, வடிவமின்மை, வெகுஜனத்தன்மை போன்றன சேரும்போது சில கவிதைகள் பின்நவீனத்துவம் நோக்கியும் பாயப்பார்க்கின்றன. அவரது இலக்கியக் கொள்கையையும், அவருடைய சமுதாயப் பார்வையையும், மனித நலத்தை நாடிய போக்குகளையும் அவருடைய கவிதைகளிலிருந்து இனங்காண முடிகின்றது. நிறையக் கவிதைகளில் குத்தலான நகைச்சுவை உணர்வும் விரவிக்கிடக்கிறது. டீன்கபூரின் கவிதைகளின் இன்னொரு சிறப்பம்சம் மண் மணக்கும் சொற்களாகும்.. சில கவிதைகளுக்குள் இருண்மை காரணமாக முதல் வாசிப்பில் நுழைவது ஓரளவு கடினமானதாகவே இருக்கின்றது. ஆனால் டீன்கபூர் அந்த இருண்மைகளைக் களைவதற்கான சிறு ஒளியையாவது கவிதைகளின் ஒரு மூலையில் வைத்திருக்கின்றார்.

அம்ரிதா ஏயெம்
02.01.2007

No comments:

Post a Comment